கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கொடைக்கானல் வருகை
3 நாட்கள் சுற்று பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கொடைக்கானல் வருகிறார். இதையொட்டி மலைப்பாதையில் மோப்பநாய் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் சுற்று பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடைக்கானலுக்கு வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் மதுரைக்கு மதியம் 1 மணிக்கு வருகிறார். பின்னர் மதுரையில் இருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகிறார். கொடைக்கானலில் அரசுக்கு சொந்தமான கோகினூர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி தங்குகிறார்.
இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் இருக்கும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு கவர்னர் செல்கிறார். அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் மதியம் அங்கிருந்து புறப்பட்டு கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை அவர் பார்வையிடுகிறார். மாலையில் மீண்டும் கோகினூர் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.
பலத்த பாதுகாப்பு
இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கொடைக்கானலில் இருந்து காரில் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கவர்னர் செல்ல இருக்கிறார். கவர்னர் ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக கொடைக்கானலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி கொடைக்கானலுக்கு வருவதையொட்டி திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 13 துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என மொத்தம் 1,100 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வெடிகுண்டு சோதனை
கொடைக்கானல் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கவர்னர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அவர் பார்வையிட இருக்கும் சுற்றுலா இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வெடிகுண்டுகளை கண்டறியும் 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த போலீஸ் குழுவினர் மூலம் கோகினூர் மாளிகை, பல்கலைக்கழக வளாகம் மற்றும் கவர்னர் செல்லும் மலைப்பாதை ஆகிய இடங்களில் வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் நேற்று முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் மோப்பநாய்களை கொண்டும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.
-----
2 நாட்கள் வாகன போக்குவரத்து மாற்றம்
கவர்னர் ஆர்.என்.ரவி கொடைக்கானல் வருவதையொட்டி வாகன போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
எனவே அந்த நேரத்தில் கொடைக்கானலுக்கு செல்லவும், கொடைக்கானலில் இருந்து வருவதற்கும் அந்த சாலையில் அனுமதி இல்லை. அதேநேரம் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.