'கவர்னரிடம் தகவல்களும், தரவுகளும் இருக்கிறது'; எச்.ராஜா பேட்டி
'கவர்னரிடம் தகவல்களும், தரவுகளும் இருக்கிறது' என்று எச்.ராஜா கூறினார்.
புதுக்கோட்டையில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
கவர்னரிடம் தகவல்கள் இருக்கிறது
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றபோது அமெரிக்காவில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதியளிக்கப்படுவதாக அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். அதுபோல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்தபோது அந்நிய தலையீடு இருந்தது என்ற சந்தேகங்கள் இருக்கிறது. மத தலையீடும் இருந்தது.
இந்தியாவுக்கு தேவையான தாமிரங்களில் 40 சதவீதத்தை ஸ்டெர்லைட் உற்பத்தி செய்தது. இந்த ஆலையை மூடிவிட்டால் சீனாவில் தான் தாமிரம் வாங்க வேண்டிய சூழல். ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது அ.தி.மு.க. அரசு. 2010-ம் ஆண்டு விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது ஆ.ராசா தான். தமிழக கவர்னருக்கு தகவல்களும், தரவுகளும் கையில் இருக்கிறது. கவர்னர் பேசியது தவறு என்றால் யாருக்காவது தைரியம் இருந்தால் நீதிமன்றத்தை நாடுங்கள். நாட்டிற்கு விரோதமாக அந்நிய, தீய சக்திகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தி.மு.க. கூட்டணி கட்சிகள்...
கவர்னருக்கு எதிராக தி.மு.க.வுடன் உள்ள கட்சிகள் பேசினால் அது மு.க.ஸ்டாலினுக்கு ஆபத்தாக முடியும். இந்த அரசாங்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் வாயை அடக்கியிருப்பது நல்லது. கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். கவர்னர் ஆதாரத்தை வெளியிட்டால் என்ன செய்வார்கள்.
அதானிக்கு எதிராக என்ன ஆதாரம் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. நிலக்கரி சுரங்க விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அண்ணாமலை கேட்டதால்தான் மத்திய மந்திரி நிலக்கரி சுரங்க அனுமதியை ரத்து செய்தார்.
அமைச்சர்களின் சொத்து பட்டியல்
அ.தி.மு.க.- பா.ஜ.க. உறவு நன்றாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரிடமும் சமமாக இருந்து வருகிறோம். ஒன்றுபட்ட அ.தி.மு.க. இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்று பா.ஜ.க. கூட்டணி கட்சி என்ற முறையில் அறிவுறுத்தியது. ஆனால் இது அவர்கள் முடிவு. இந்த விஷயத்தில் பா.ஜ.க. தலையீடு கிடையாது. தேர்தலில் சன்னியாசம் வாங்க போகிறேன் என்று நான் கூறவில்லை.
ஏப்ரல் 14-ந் தேதி தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட உள்ளதாக கூறியுள்ளார். அதன் பிறகு ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.