ஓமலூர் அருகே இரவில் பரபரப்பு: அரசு டவுன் பஸ்சை நிறுத்தி கண்டக்டர், டிரைவர் மீது தாக்குதல் 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

ஓமலூர் அருகே நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ்சை நிறுத்தி கண்டக்டர், டிரைவர் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-19 20:27 GMT

ஓமலூர்,

அரசு பஸ்சை நிறுத்திய மர்ம நபர்கள்

ஓமலூரில் இருந்து காமலாபுரம், பொட்டியபுரம் வழியாக தின்னப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 10.15 மணியளவில், ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து தின்னப்பட்டிக்கு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது.

இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 40) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக அரூர் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் (35) மற்றும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர்.பொட்டியபுரம் அருகே சென்ற போது மர்ம நபர்கள் சிலர் அரசு டவுன் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் ஒரு வாலிபர், டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகளை சரமாரியாக தாக்கி உள்ளார்.

கண்டக்டர் காயம்

இதில் கண்டக்டர் வேடியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பஸ்சில் பயணம் செய்த முள்ளுசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த மற்றொரு அரசு பஸ் டிரைவர் சுரேஷ் குமார் என்பவரையும் மர்ம நபர்கள் தாக்கினா். இதில் அவரது பல் உடைந்தது. இதனால் பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த வாலிபர் பஸ்சின் முன்பு படுத்து கொண்டு பஸ்சை எடுக்கக்கூடாது என தகராறு செய்துள்ளார். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் அவர் ரகளையில் ஈடுபட்டார். மேலும் அவர் பஸ்சின் சாவியையும் எடுத்து வைத்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் அங்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க முற்பட்டனர். போலீசிடம் இருந்து அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். மற்ற நபர்களும் அங்கிருந்து தப்பிசென்றனர்.

இதையடுத்து காயமடைந்த கண்டக்டர் வேடியப்பன் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரணையில் பஸ்சை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர், பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஓமலூர் அருகே இரவில் நடந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓமலூர் அருகே நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ்சை வழிமறித்து கண்டக்டர், டிரைவர் மற்றும் பயணிகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படு்த்தியது. அரசு பஸ் கண்டக்டர், டிரைவரை தாக்கிய வாலிபர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று மதியம் 12 மணி வரை ஓமலூரில் இருந்து காமலாபுரம், பொட்டியபுரம் வழியாக தின்னப்பட்டிக்கு செல்லும் 5 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தும்பிபாடி, சர்க்கரைசெட்டிபட்டி பொட்டியபுரம், காமலாபுரம் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். பஸ் போக்குவரத்து நிறுத்தம் குறித்து தகவல் கிடைத்ததும், போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து நேற்று பகல் 12 மணிக்கு மேல் போலீஸ் பாதுகாப்புடன் ஓமலூரில் இருந்து பொட்டியபுரம், சர்க்கரை செட்டிபட்டி வழியாக தின்னப்பட்டி வழித்தடத்தில் டவுன்பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்