பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீது தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்
பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார்.
தஞ்சாவூர், ஏப்.8-
பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறினார்.
ஆய்வு
தஞ்சை அரசு கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை அரசு கூர்நோக்கு இல்லம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஆரோக்கிய குறைபாடு உடைய 2 குழந்தைகளை மீட்டு, அவர்களின் படிப்பு செலவுக்காக தஞ்சை கலெக்டர், தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.30 ஆயிரம் வழங்கியதுடன், குழந்தைகளை பராமரிக்க ஒரு டாக்டரை நியமனம் செய்துள்ளார். 2 குழந்தைகளும் நலமுடன் இருப்பதற்கு கலெக்டர் தான் முழு காரணம்.பிரதமர் நரேந்திர மோடி, குழந்தைகளுக்கு என 38 சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மீது தமிழகஅரசு தனி கவனம் செலுத்த வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக அவதூறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்.
விளக்கம்
தஞ்சை மாவட்டத்தில் 2 இடங்களில் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த சுமார் 1,000 மாணவர்கள் வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லமுடியாத சூழலில் உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது. அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலைக்கு காரணம், அவர்களின் வறுமையா? அல்லது சாதியா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்ய வேண்டும்.வேலூர் கூர்நோக்கு இல்லத்திலும், காஞ்சீபுரம் பெண்கள் கூர்நோக்கு இல்லத்திலும் தலா 6 பேர் தப்பியோடியது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடமும், வேலூர் போலீஸ் துறையினரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோர் உடன் இருந்தனர்.