அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை-பணம் திருட்டு

கன்னியாகுமரி அருகே பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-06-22 19:52 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே பட்டப்பகலில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

அரசு பள்ளி ஆசிரியர்

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தை அடுத்த பெரியவிளை ரோட்டில், லட்சுமிபுரத்தில் வசிப்பவர் கிறிஸ்டோபர் தங்கராஜ் (வயது58). இவர் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெப ராணி பிரபா. இவர் களக்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.

நேற்று காலை இருவரும் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர். மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகை-பணம் திருட்டு

உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில் உள்ள மேஜை உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.27 ஆயிரம் ரொக்கமும் மாயமானது தெரிய வந்தது. பட்டப்பகலில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்்ம ஆசாமிகள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுபற்றி கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் தேடுகிறது

அதே சமயம் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்