அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

மண்ணச்சநல்லூர் அருகே போக்சோ வழக்கில் தொடர்புடைய அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-14 19:11 GMT

சமயபுரம், செப்.15-

மண்ணச்சநல்லூர் அருகே போக்சோ வழக்கில் தொடர்புடைய அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆங்கில ஆசிரியை

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி லில்லி (வயது 32). இவர் உப்பிலியபுரம் அருகே உள்ள நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இவர்களுக்கு திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை என்று தெரிகிறது. இந்நிலையில் ஆசிரியர் மோகன்தாஸ் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போது, அதற்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியை லில்லி மீது முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மனஉளைச்சலில் இருந்த லில்லி நேற்று மண்ணச்சநல்லூர் சீதாலட்சுமி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லில்லியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆசிரியையின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்