அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 99 பேர் தேர்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 99 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 38 பேர் மதுக்கூர் அரசு பள்ளி மாணவிகள் ஆவர்.

Update: 2023-06-16 20:23 GMT

தஞ்சை மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 99 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 38 பேர் மதுக்கூர் அரசு பள்ளி மாணவிகள் ஆவர்.

நீட் தேர்வு

மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வான `நீட்' தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 8-ந் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 13-ந் தேதி வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் இத்தேர்வை எழுதியிருந்தனர். இதில் 78 ஆயிரத்து 693 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் `நீட்' தேர்வு எழுத சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சை அரண்மனை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாச்சியார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

99 மாணவர்கள் தேர்ச்சி

இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் 5,154 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இவர்களில் 320 பேர் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆகும். நீட் தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்களில் 107 மதிப்பெண்கள் எடுத்தால் தகுதி வாய்ந்ததாக கருதப்படும்.

அதன்அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 99 மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த 28 பேரும், அதே பள்ளியை சேர்ந்த மறுமுறை தேர்வாளர் (ரிப்பீட்டர்) 10 பேர் என மொத்தம் 38 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியை வீட்டில் படித்த 4 மாணவிகள்

மதுக்கூர் அரசு பெண்கள் பள்ளியில் படித்து வந்த கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய மாணவிகள் தனது பள்ளியின் உயிரியியல் ஆசிரியை மேகனாதேவி வீட்டில் நிவேதா, சுவேதா, ரவீணா, கிருஷ்ணபிரியா ஆகிய 4 மாணவிகள் தங்கி படித்து நீட் தேர்வு எழுதினர். இந்த 4 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மாணவிகள் அதிகஅளவில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் மாணவர்கள் மிக குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்று இருந்தனர்.

இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி நீட் சிறப்பு மையங்களில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மு.சிவக்குமார் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 25 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. கலந்தாய்வு தொடங்கிய பின்பு தான் இதன் விவரம் தெரியவரும் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்