ஆங்கில பாடத்திற்கு ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி அரசு பள்ளி மாணவர்கள் தர்ணா

ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளியில் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி மாணவர்கள், தங்களது பெற்றோருடன் பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-21 21:00 GMT

ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளியில் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி மாணவர்கள், தங்களது பெற்றோருடன் பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பள்ளி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஜி.கல்லுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த கல்வி ஆண்டு வரையில் இந்த பள்ளியில் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் இருந்தனர். இதற்கிடையே இப்பள்ளியில் பணியாற்றிய ஆங்கில பாட ஆசிரியர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிமாறுதலாகி வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார். இதனால் ஜி.கல்லுப்பட்டி பள்ளியில் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியர் பணியிடம் காலியானது. இதுவரை அந்த பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட நிலையில், ஆங்கில பாடத்திற்கு ஆசிரியர் இல்லாததால் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தர்ணா போராட்டம்

இதுகுறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர், ஆங்கில ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், தங்களது குழந்தைகளுடன் பள்ளி முன்பு உள்ள ஒரு மரத்தடிக்கு திரண்டு வந்தனர். அப்போது மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல், மரத்தடியில் தங்களது பெற்றோருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தர்ணாவில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அப்போது கல்வித்துறை அதிகாரிகள் வரும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனக்கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது மரத்தடியில் அமர்ந்தபடி மாணவர்கள் புத்தகங்களை படித்தனர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து ஆண்டிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீதேவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர், தர்ணா போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 26-ந்தேதிக்குள் ஜி.கல்லுப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு ஆங்கில ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று உறுதி அளித்தனர்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவ, மாணவிகளும் வகுப்பறைக்கு சென்றனர். இந்த போராட்டத்தால் ஜி.கல்லுப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்