விஷவாயு தாக்கி இறந்த 4 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண நிதி

விஷவாயு தாக்கி இறந்த 4 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டனா.

Update: 2022-11-18 18:58 GMT

கரூர் சுக்காலியூர் காந்தி நகர் பகுதியில் தனி நபர் வீடு கட்டுமான பணியின்போது கழிவுநீர் தொட்டியில் கான்கிரீட் பலகைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு கோபால்,மோகன்ராஜ், ராஜேஷ்குமார், சிவக்குமார் ஆகிய 4 பேர் இறந்தனர். இதையடுத்து உயிர் இழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசின் சார்பாக இறந்து போன கோபால் என்பவரின் மனைவி விஜயலட்சுமிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக நிவாரண உதவியாக ரூ.6 லட்சத்திற்கான காசோலையும், ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் சமையலர் பணிக்கான ஆணையும், மாதம் ரூ.6,700 ஓய்வூதியமும், அவரின் 11 வயது மகள் மோனிகா என்பவருக்கு கல்வி நிதி உதவியாக மாதம் ரூ.4,000 மற்றும் ரூ.8.68 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. மேலும், அவரது 3 குழந்தைகளும் உயர் கல்வி பெறும் வரை கல்வி பெறுவதற்கான அனைத்து செலவினங்களையும் அரசே முழுமையாக ஏற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இறந்து போன மோகன்ராஜ் (திருமணம் ஆகாதவர்) என்பவரின் தாயார் கலைமணிக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் நிவாரண நிதியாக ரூ.6 லட்சத்திற்கான காசோலையும், மாதம் ரூ.6,700 ஓய்வூதியத்திற்கான ஆணையும், வழங்கப்பட்டது.இறந்து போன ராஜேஷ்குமார் என்பவரின் குடும்பத்தாருக்கு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் விபத்து மரணம் நிவாரண தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், அவரது மனைவி துளசிமணி என்பவருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000-க்கான ஆணையும், இவரின் குழந்தைகளுக்கு கல்வி உதவியாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலம் ரூ.4,000-க்கான மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையும் வழங்கப்பட்டது.இறந்து போன சிவக்குமார் என்பவரின் குடும்பத்தாருக்கு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் விபத்து மரணம் நிவாரண தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், அவரது தாயார் மாரியாய் என்பவருக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூ.1,000-மும், இறந்து போனவரின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகையாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலம் மாதம் ரூ.4,000-க்கான ஆணையையும் வழங்கப்பட்டது.மேலும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 மாதத்திற்கு தேவைப்படும் அளவிற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தங்களுக்கு தேவைப்படும் உதவிகளை நீங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் வந்து என்னை சந்தித்து உங்கள் கோரிக்கையினை வழங்குங்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் என்றும் உறுதுணையாக இருக்கும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்