மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும்

மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

Update: 2022-07-25 19:26 GMT

மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

மின் கட்டணம்

விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா. தலைவர் ராஜபாண்டியன் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த காலத்தில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறு தொழில் புரிவோர் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் மின் கட்டணத்தை 27 சதவீதம் உயர்த்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசு தனது தேர்தல் அறிக்கையில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடும் முறை செயல்படுத்தப்படும். இதனால் பொதுமக்களுக்கு மின் கட்டணம் குறையும் என தெரிவித்திருந்தது.

நிதி சுமை

தற்போது அதற்கு மாறாக மின் கட்டண உயர்வு அறிவித்திருப்பது பொதுமக்களையும், சிறு தொழில் செய்பவர்களையும் வஞ்சிக்கும் செயலாகும்.

இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்தும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த அரசு அறிவித்த சொத்து வரி உயர்வு, தற்போது அறிவித்துள்ள மின் கட்டணம் உயர்வு பொதுமக்களை வெகுவாக பாதிக்கும்.

எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஊதிய நிலுவைத்தொகை

அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் உள்ள படிக்காசு வைத்தான்பட்டி பஞ்சாயத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர் குருவம்மாள் மற்றும் வத்திராயிருப்பு யூனியன் குன்னூர் பஞ்சாயத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர் மாரிமுத்து ஆகியோர் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்