அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது

அரசு நடுநிலைப்பள்ளி வகுப்பறையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது

Update: 2022-10-10 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே நடுநிலைப்பள்ளி கட்டிட மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது. அப்போது மாணவர்கள், ஆசிரியர் இல்லாததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

மேற்கூரை பூச்சு விழுந்தது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மதுராபுரி ஊராட்சியில் உள்ள வேங்கைப்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 142 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 3 கட்டிடங்களில் செயல்பட்டு வந்த இப்பள்ளியில், ஒரு கட்டிடம் பழுதானதால் மற்ற 2 கட்டிடங்களில் வகுப்புகள் நடந்து வந்தது. ஆனால் வகுப்பறை கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு கட்டிடம் பற்றாக்குறை உள்ளதாகவும் மாணவர்கள் கூறினர்.

கடந்த ஒரு வாரம் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பள்ளி மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் இந்த பள்ளியில் வகுப்பறைகளை சுத்தம் செய்வதற்காக பணியாளர் பள்ளியை திறந்தார். அப்போது, 7-ம் வகுப்பு அறையின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து, ஆசிரியர் அமர்ந்திருக்கும் இடம் மற்றும் நாற்காலி உடைந்து கிடந்தது.

கோரிக்கை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தகவல் கூறியதன் அடிப்படையில் அவர் விரைந்து வந்து மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காமல் அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்றம் செய்தார். மேலும் வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி, தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் விரைந்து வந்து கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும்போது, பள்ளி வகுப்பறை கட்டிடத்தின்மேல் கூரை பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது. அப்போது மாணவர்கள், ஆசிரியர் அங்கு இருந்திருந்தால் விபரீதம் ஏற்பட்டு இருக்கும். எனவே மாணவர்கள் பாதுகாப்பாக அமர்ந்து படிப்பதற்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்