அரசு மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா

ாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா மற்றும் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று டீன் பிரின்ஸ் பயஸ் பேசினார்.

Update: 2023-09-01 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா மற்றும் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று டீன் பிரின்ஸ் பயஸ் பேசினார்.

வரவேற்பு நிகழ்ச்சி

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டில் ஒவ்வொரு ஆண்டும் 150 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. இதில் மாநில அரசின் ஒதுக்கீட்டு அடிப்படையில் 123 இடங்களும், மத்திய அரசின் ஒதுக்கீட்டு அடிப்படையில் 27 இடங்களும் நிரப்பப்படுகின்றன. இந்தநிலையில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா, புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ் தலைமை தாங்கி, மாணவர்களை வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்து, மருத்துவம் படிக்க வந்துள்ள மாணவ- மாணவிகள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மருத்துவம் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. படிப்பைவிட ஒழுக்கமாக இருப்பதில்தான் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன்

முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளை, மூத்த மாணவர்கள் 'ராக்கிங்' செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது உங்களை ராக்கிங் செய்தால் உடனடியாக தயங்காமல் புகார் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை அடிக்கடி வந்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு தேவையில்லாமல் அதிகமாக பணம் கொடுத்து அவர்களை கெடுக்கக்கூடாது. இந்த கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ- மாணவிகள் அனைவரும் நல்ல முறையில் மருத்துவம் படித்து வீட்டுக்கும், நாட்டுக்கும் பயன் உள்ளவர்களாக திகழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பூக்கள் கொடுத்து வரவேற்பு

முதல்நாளான நேற்று 137 மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு மூத்த மாணவ- மாணவிகள் பூக்கள் கொடுத்து வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் லியோ டேவிட், தலைமை விடுதி வார்டன் டாக்டர் சுரேஷ்பாலன், ஆண்கள் விடுதி வார்டன் செல்வின் ஜெயக்குமார், பெண்கள் விடுதி வார்டன் டெல்பின் மற்றும் துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று வந்திருந்த 137 மாணவர்களில் 31 பேர் அடுத்தடுத்து நடந்த கலந்தாய்வில் பங்கேற்று வேறு கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். அவர்களில் 24 பேர் நேற்று வேறு கல்லூரிகளுக்கு செல்வதற்கான கடிதத்தை பெற்றுச் சென்றனர். வேறு கல்லூரிகளுக்குச் செல்லும் 31 பேருக்கு பதிலாக வேறு மாணவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் வந்து சேர்வார்கள் என்றும் டீன் பிரின்ஸ் பயஸ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்