அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-05-25 11:19 GMT

சென்னை,

மதுரையில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் 90 செண்ட் நிலம் கடந்த 1968-ம் ஆண்டு தனியார் ஓட்டல் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் குத்தகை காலம் 2008-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், சந்தை மதிப்பின் அடிப்படையில் நிலத்திற்கு வாடகை நிர்ணயம் செய்து, 36 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் என்றும், செலுத்த தவறினால் நிலத்தின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றும் 2015-ம் ஆண்டு மதுரை வடக்கு தாலுகா தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனத்தின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், குத்தகை காலம் முடிந்த பிறகு, அரசு நிர்ணயித்த வாடகையை செலுத்தாமல் 300 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் அனுமதியின்றி ஓட்டல் நடத்தி அதிக லாபம் அடைந்துள்ளதாகக் கூறி, அந்த தனியார் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

மேலும் நிதி நெருக்கடி இருக்கக்கூடிய நிலையில், அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டியது அரசின் கடமை என்று தெரிவித்த நீதிபதி, ஒரு மாதத்தில் தனியார் ஓட்டலை அப்புறப்படுத்தி அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்றும், வாடகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு சொத்துக்கள், குத்ததைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்த குத்தகை விவரங்களை மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழக வருவாய்த்துறை செயலாளருக்கும், நில நிர்வாக ஆணையருக்கும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Full View

  

Tags:    

மேலும் செய்திகள்