தென் மாவட்ட மக்களை மீட்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடியின் பல பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்துள்ளது.

Update: 2023-12-23 13:16 GMT

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18-ந் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத அதி கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக, தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

மழை பாதிப்பில் இருந்து நெல்லை தற்போது மீண்டுவரும் நிலையில், தூத்துக்குடியின் ஒருசில பகுதிகளில் மழைநீர் வடியாமல் இருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பல பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர்.

தலைமைச் செயலாளரும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது." இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்