அரசு ஆஸ்பத்திரி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
ஊட்டியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. கோத்தகிரியில் மண் சரிவு ஏற்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. கோத்தகிரியில் மண் சரிவு ஏற்பட்டது.
தடுப்புச்சுவர் விழுந்தது
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுவடைந்து நேற்று முன்தினம் கரையை கடந்தது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. ஊட்டியில் கடந்த 3 நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவியது. இந்தநிலையில் நேற்று பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு புதிதாக கட்டப்பட்டு வந்த தடுப்புச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் வெளிநோயாளிகள் பிரிவு பகுதியில் தடுப்புச்சுவர் விழுந்ததால், வளாகத்தில் காத்திருக்க முடியாத நிலை உள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் பாதுகாப்பு கருதி தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண் சரிவு
வார விடுமுறையான நேற்று கொட்டும் மழையிலும் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்தனர். அவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடியும், சிலர் நனைந்தபடியும் கண்டு ரசித்தனர். அப்போது செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக கோத்தகிரி அருகே நெடுகுளா கிராமத்தில் காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதேபோல் கோத்தகிரியில் ஆங்காங்கே லேசான மண் சரிவுகள் ஏற்பட்டன. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கோத்தகிரியில் 44 மில்லி மீட்டர், கோடநாட்டில் 47 மில்லி மீட்டர், கீழ் கோத்தகிரியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவானது.