ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை
ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
ஆவுடையார்கோவில்:
மணமேல்குடி வட்டத்தில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கி ஆவுடையார் கோவில் கிளை மேலாளர் கார்த்திக் கலந்து கொண்டு சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினார். இதில் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவினருக்கான குழு போட்டியில் நீலமேகம் தலைமையிலான ஆண்கள் அணி கோ-கோ போட்டியில் முதலிடமும், அபிநயா தலைமையிலான பெண்கள் அணி கபடி போட்டியில் முதலிடமும், பேட்மிண்டன் டபுள்ஸில் இரண்டாமிடமும், சிங்கிள்ஸில் முதலிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் போன்ற தனிநபர் போட்டிகளில் முதலிடம் பிடித்து 11 தங்க பதக்கங்களையும், இரண்டாமிடம் பிடித்து 17 வெள்ளி பதக்கங்களையும், மூன்றாம் இடம்பிடித்து 13 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது. வெற்றிக்காக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.