திண்டுக்கல் மாவட்டத்தில் 10 இடங்களில் ஜமாபந்தி
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 இடங்களில் நாளை மறுநாள் ஜமாபந்தி தொடங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 இடங்களில் நாளை மறுநாள் ஜமாபந்தி தொடங்குகிறது.
ஜமாபந்தி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் 1431-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. இதில் திண்டுக்கல் மேற்கு தாலுகாவில் நடக்கும் ஜமாபந்திக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்குகிறார். கிழக்கு தாலுகா அலுவலகத்தில் நடக்கும் ஜமாபந்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை தாங்குகிறார்.
ஜமாபந்தியின் போது திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளிக்கலாம். அதாவது நிலப்பதிவு, பட்டா மாறுதல், நில ஒப்படைப்பு, நில நிர்வாகம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கலாம். அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு அளிக்கப்படும்.
பதிவேற்றம் செய்யப்படும்
இதேபோல் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தலைமையிலும், பழனி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமையிலும், கொடைக்கானல் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது. மேலும் ஆத்தூர், நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களிலும் நாளை மறுநாள் ஜமாபந்தி நடக்கிறது.
ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அனைத்தும் முதற்கட்டமாக முதல்-அமைச்சரின் ஹெல்ப் லைன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர் மனுதாரர்களுக்கு ஒப்புதல் ரசீது வழங்கப்படும். அதையடுத்து மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரர்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.