சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடக்கம்

சேலத்தில் நடந்த அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் 206 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.

Update: 2022-08-28 22:04 GMT

அரசு பொருட்காட்சி

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே மாநகராட்சி திடலில் செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது.

இதற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மேயர் ராமச்சந்திரன், செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர்கள் பங்கேற்பு

இதில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அரசு பொருட்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, வனத்துறை, அறநிலையத்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மகளிர் திட்டம், செய்தி மக்கள் தொடர்பு துறை, வேளாண்மை, தோட்டக்கலை துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

நலத்திட்ட உதவி

இதைத்தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

இதில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

அரசின் திட்டங்களை கடைக்கோடி பகுதி மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பணியை செய்தி-மக்கள் தொடர்பு துறை செய்து வருகிறது. இதுபோன்ற அரசு பொருட்காட்சியை நடத்தும்போது, நகரத்தில் உள்ளவர்கள் பொழுதுபோக்கிற்காக தங்களது குடும்பத்தினருடன் வருவார்கள்.

விவசாயிகள் என்ன செய்கிறார்கள். வியாபாரிகள் என்ன பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அதனை எவ்வாறு தயார் செய்கின்றனர்? அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் எப்படி வழங்கப்படுகிறது? அதை எவ்வாறு பெறுவது என்பது குறித்து தெரிந்து கொள்ள ஒரு நல்லவாய்ப்பாக இந்த பொருட்காட்சி அமைந்துள்ளது.

கலை நிகழ்ச்சிகள்

பாரம்பரிய மிக்க நமது பண்பாட்டை பறைசாற்றும் வகையில் பொருட்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, நாடக கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதுபோன்ற அரசு பொருட்காட்சியை பொதுமக்கள் பார்த்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 206 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, சாமிநாதன் ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சி 45 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்