காப்பீடு நிறுவனத்தில் செலவு தொகை பெறாத அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்
மருத்துவ சிகிச்சை செய்து காப்பீடு நிறுவனத்தில் செலவு தொகை பெறாத அரசு ஊழியர்கள், காப்பீட்டு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
செலவு தொகை
தமிழக அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா சிகிச்சை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் 1.7.2021 முதல் 30.6.2023 வரை மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு செலவுத்தொகையை காப்பீடு நிறுவனத்தில் இருந்து பெறாமலும், சிகிச்சைக்குரிய செலவுத் தொகையை பெறுவதற்கு இதுவரையிலும் விண்ணப்பம் அளிக்காதவர்கள் 31.10.2023-க்குள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்திற்கு காப்பீடு அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு விவரம் மற்றும் அனைத்து அசல் மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
ஓய்வூதியர்கள் விண்ணப்பம்
அதே போலவே 1.7.2022 முதல் 30.6.2023 வரை மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு செலவுத்தொகையை காப்பீடு நிறுவனத்தில் இருந்து பெறாமலும், சிகிச்சைக்குரிய செலவுத்தொகையை பெறுவதற்கு இதுவரையிலும் விண்ணப்பம் அளிக்காத ஓய்வூதியர்கள் 31.10.2023-க்குள் கடலூர் மாவட்ட கருவூலத்தில் அல்லது ஓய்வூதியம் பெறும் சார் கருவூலத்தில் காப்பீடு அடையாள அட்டை நகல், ஓய்வூதிய புத்தக நகல், வங்கி கணக்கு விவரம் மற்றும் அனைத்து அசல் மருத்துவ ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு பணியாளர்களின் விண்ணப்பங்கள் தொடர்புடைய அலுவலகங்களில் இருந்தும், ஓய்வூதியர்களின் விண்ணப்பங்கள் கடலூர் மாவட்ட கருவூலத்தில் இருந்தும் நேரடியாக முதன்மை மேலாளர் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.