ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை வேலையில்லா இளைஞர்களுக்கு காலமுறை ஊதியத்தில் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு நீலகிரி மாவட்ட தலைவர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதேபோல் மேலும் 9 அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆஸ்ரா, நிர்வாகி சிவக்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
மருத்துவ காப்பீட்டு திட்டம்
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
கடந்த ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டனர். இதையடுத்து தி.மு.க. பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தும், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அகவிலைப்படி, முடக்கப்பட்ட சரண் விடுப்பை உடனே வழங்கிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் ஒப்பந்த ஊதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். கருவூலம் உள்ளிட்ட அரசு துறைகளில் மென்பொருள் திட்டங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது. அரசு ஊழியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதேபோல் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் பாபு தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.