பெஞ்சல் புயல் பாதிப்பு : ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு நிவாரணப் பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நிதி உதவி வழங்கியுள்ளார்.
சென்னை,
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால், அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்த 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மேலும் இந்த புயல் காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டியதால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதால், மலையடிவாரத்தில் இருந்த ஒரு வீட்டை மண் மூடியது. அந்த வீட்டில் இருந்த 7 பேர் உயிரோடு புதைந்து பலியானார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு ஏற்பட்டு, மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பெஞ்சல் புயல் கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வழங்கினார்.