திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியர் சந்திப்பு பிரசாரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது.

Update: 2022-06-23 16:51 GMT

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர் சந்திப்பு பிரசார இயக்கம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள சுமார் 4½ லட்சம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரசார இயக்கம் நடந்தது. இதில் அரசு ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதேபோல் பழனி தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் பிரசார இயக்கம் நடந்தது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட துணைத்தலைவர் பிச்சைவேல், பழனி வட்டக்கிளை நிர்வாகிகள் ராமசாமி, நாகராஜ், கந்தசாமி மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை, மேற்கு தாலுகா அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகங்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் அரசு ஊழியர் சந்திப்பு பிரசார இயக்கம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்