அரசுத்துறை ஆவணங்கள் சாலையில் பறந்ததால் பரபரப்பு

ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் அரசுத்துறை தொடர்பான ஏராளமான ஆவணங்கள் வாகனத்தில் கொண்டு சென்றபோது கீழே கொட்டி காற்றில் பறந்து சாலையில் சிதறி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2023-09-10 18:42 GMT

ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் அரசுத்துறை தொடர்பான ஏராளமான ஆவணங்கள் வாகனத்தில் கொண்டு சென்றபோது கீழே கொட்டி காற்றில் பறந்து சாலையில் சிதறி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

சாலையில் பறந்த அரசுத்துறை ஆவணங்கள்

ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் நேற்று பிற்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான ஆவணங்கள் காற்றில் பறந்து சென்றபடி இருந்தன. இதனை கண்ட அந்த பகுதியினர் அதனை எடுத்து பார்த்தபோது அரசு துறை ஆவணங்கள் என்பதும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சமூக தணிக்கை தொடர்பான ஆவணங்கள் மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட செயலாக்கம் தொடர்பான ஆவணங்கள் என்பதும் தெரியவந்தது. ஏராளமான அரசு துறை தொடர்பான ஆவணங்கள் காற்றில் பறந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வழியாக மூடைகளில் இந்த ஆவணங்களை கொண்டு சென்றவரிடம் பொதுமக்கள் ஆவணங்கள் கீழே கொட்டி காற்றில் பறப்பதாக தெரிவித்த போதும் அவர் கண்டுகொள்ளாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சமூக தணிக்கைக்துறை ஆவணங்கள் என்பதும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டபோது இவ்வாறு காற்றில் பறந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் யூனியன் கிராம ஊராட்சி ஆணையாளர் சேவுகப்பெருமாளிடம் கேட்ட போது கூறியதாவது:- ராமநாதபுரம் யூனியனுக்கு உட்பட்ட சமூக தணிக்கை தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்காக மூடைகளில் கட்டி கொண்டு சென்றபோது எதிர்பாராத விதமாக அதிலிருந்து ஆவணங்கள் கீழே கொட்டி காற்றில் பறந்து உள்ளன. இது பற்றி எனக்கு தகவல் வந்ததும் உடனடியாக ஒரு ஆவணங்கள் கூட விடுபடாமல் அனைத்தையும் தேடி கண்டுபிடித்து கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்