கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் செல்லும் அரசு பஸ்கள்

தென்மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் அரசு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் செல்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-02-06 18:45 GMT

கிணத்துக்கடவு, 

தென்மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் அரசு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் செல்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

அரசு விரைவு பஸ்கள்

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவு பகுதி உள்ளது. இதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த ஊர்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள், திருவிழா போன்றவற்றுக்கு செல்ல கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக செல்லும் அரசு விரைவு பஸ்களை பயன்படுத்தி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிணத்துக்கடவு ஊருக்குள் 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இதனால் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான பஸ்கள் நிறுத்தப்பட்டு, அந்த பஸ்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டது. தற்போது வழித்தடம் மாற்றப்பட்ட அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன.

கடும் அவதி

அதேபோல் நெல்லையில் இருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு செல்லும் அரசு விரைவு பஸ்களில் கோவைக்கு டிக்கெட் எடுத்து பயணிகள் கிணத்துக்கடவில் இறங்க வேண்டும் என்றால் கூட, கண்டக்டர்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் செல்லாது மேம்பாலத்தில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். அப்படியே இறங்கினாலும் பயணிகள் 1½ கி.மீ. நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பயணிகளின் நலன் கருதி கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக செல்லும் அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்லவும், அதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் கிணத்துக்கடவுக்குள் வந்து பயணிகளை இறக்கி விட்டு செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நடவடிக்கை

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கிணத்துக்கடவு ஊருக்குள் மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளதால், தற்போது கிணத்துக்கடவு ஊருக்குள் அரசு விரைவு பஸ்கள் செல்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி கிணத்துக்கடவு ஊருக்கு கோவை, நெல்லை பகுதியில் இருந்து வரும் அனைத்து அரசு விரைவு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்