சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - தொழிலாளி பலி
கூடலூர் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கூடலூர்,
கோயம்புத்தூரில் இருந்து குமுளி நோக்கி இன்று அதிகாலை 5 மணிக்கு அரசு பஸ் ஒன்று கூடலூர் பஸ் நிலையத்திற்கு வந்தது.அதில் கூடலூரைச் சேர்ந்த ஏல தோட்ட கூலி தொழிலாளர்கள் மற்றும் , அதில் வந்த பயணிகள் என 25-க்கும் மேற்பட்டோர் குமுளி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
கூடலூர்- குமுளி தேசிய நெடுஞ்சாலயில் கருணாநிதி காலணி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அதனால் பயணிகள் அனைவரும் பயத்துடன் கூச்சலிட்டனர். இவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து இவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கூடலூர் தெற்கு போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கூடலூர் வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்த மாயி என்கிற கிருஷ்ணமூர்த்தி (வயது 50), கூலி தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த கூடலூரைச் சேர்ந்த பெருமாளப்பன் (66), மாடசாமி (54), வீராசாமி (60), மற்றும் பெரியகுளத்தை சேர்ந்த காளியம்மாள் (65), திருப்பூரைச் சேர்ந்த மலர்விழி (32) ஆகிய 5 பேர் மேல் சிகிச்வைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக ஜெயமங்கலத்தைச் சேர்ந்த, அரசு பஸ் டிரைவர் பழனிச்சாமி(50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்