அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; பிளஸ்-2 மாணவர் பலி

நாகர்கோவிலில் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-07-05 16:05 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பிளஸ்-2 மாணவர்

நாகர்கோவில் இடலாக்குடி பறக்கை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரகீம். இவரது மகன் ஹிஷாம் அகமது (வயது 17). இவர் இடலாக்குடி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் -2 படித்து வந்தார். ஹிஷாம் அகமது தினமும் காலையில் செட்டிகுளம் பகுதியில் டியூசனுக்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று காலையிலும் டியூசனுக்கு சென்றார்.

டியூசன் முடிந்த பிறகு அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரது நண்பர் கோட்டார் சிதம்பர நகரை சேர்ந்த ஆகாஷ்சும் (17) டியூசன் முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ஹிஷாம் அகமது தன்னை தனது வீட்டில் இறக்கி விடும்படி கூறியுள்ளார். அதற்கு ஆகாஷ் ஒத்துக் கொண்டதால் அவருடைய மோட்டார் சைக்கிளை வாங்கி ஹிஷாம் அகமது ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னால் ஆகாஷ் அமர்ந்து சென்றுள்ளார்.

பரிதாப சாவு

அவர்கள் செட்டிகுளம் சந்திப்பில் இருந்து பீச்ரோடு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வாலிபர் மீது மோதியது. அந்த வேகத்தில் மோட்டார் சைக்கிளை திருப்பியபோது அந்த வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ் மீதும் மோதியது.

இதில் ஹிஷாம் அகமது, ஆகாஷ் ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். ஹிஷாம் அகமது பஸ்சின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அருகில் நின்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஒரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே ஹிஷாம் அகமது பரிதாபமாக இறந்தார். ஆகாஷ் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த வாலிபரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கண்காணிப்பு கேமரா காட்சி

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், ஹிஷாம் அகமது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் உடலைப் பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட அரசு பஸ் எது? என்பது தெரியவில்லை. இதனால் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் விபத்து காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பஸ்சை தேடி வருகிறார்கள்.

விபத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலியான சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்