அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
வடமதுரை அருகே அரசு பஸ் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து செங்குறிச்சியை அடுத்த வல்லம்பட்டிக்கு, நேற்று முன்தினம் மாலை அரசு டவுன் பஸ் சென்றது. அந்த பஸ்சை நிலக்கோட்டை அருகே உள்ள புதுசத்திரத்தை சேர்ந்த பாண்டி மகன் முனியாண்டி (வயது 40) ஓட்டினார். வடமதுரையை அடுத்த தென்னம்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் முனியாண்டி (48) கண்டக்டராக பணிபுரிந்தார்.
வல்லம்பட்டியில் பயணிகளை இறக்கிவிட்டு, திண்டுக்கல் நோக்கி மீண்டும் இரவு 10 மணி அளவில் பஸ் வந்து கொண்டிருந்தது. வடமதுரையை அடுத்த செங்குறிச்சி-கம்பிளியம்பட்டி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே பஸ் வந்தது. அப்போது மர்ம நகர் ஒருவர் திடீரென பஸ்சை மறித்து டிரைவருடன் தகராறு செய்தார். பின்னர் அவர், கீழே கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது வீசினார். இதில் பஸ் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதன்பிறகு மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் டிரைவர் முனியாண்டி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைத்தது, செங்குறிச்சி மேற்குகளம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் பழனிவேல் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.