ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறிப்பு

களக்காடு அருகே ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-08 19:14 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழசடையமான்குளத்தை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மனைவி எஸ்தர் (வயது 45). இவர் ஒரு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். சம்பவத்தன்று இவர் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த டெய்சி என்பவருடன் மொபட்டில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். டெய்சி மொபட்டை ஓட்ட, எஸ்தர் பின்னால் அமர்ந்திருந்தார். களக்காடு-சேரன்மாதேவி சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் எஸ்தரின் கைப்பையை பிடித்து இழுத்தார். ஆனால் அவர் கெட்டியாக பிடித்து கொண்டார். இதனால் கைப்பையை பறிக்க முடியாத மர்ம நபர் எஸ்தர் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி சங்கிலியை பறிப்பதற்காக பிடித்து இழுத்தார். எஸ்தர் சுதாரித்துக் கொண்டு சங்கிலியை வலுவாக பிடித்து கொண்டார். இதில் சங்கிலியின் ஒரு பகுதி 1 பவுன் மர்ம நபர் கையில் சிக்கியது. அதனுடன் அவர் தப்பி சென்று விட்டார். இதுபற்றி எஸ்தர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம் அலி, சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்