போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு
வேலூர் அருகே மொபட்டில் சென்ற தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் தங்க சங்கிலி பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேலூர்
வேலூர் அருகே மொபட்டில் சென்ற தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் தங்க சங்கிலி பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தங்க சங்கிலி பறிப்பு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் பள்ளிகொண்டா போலீஸ் நிலைய தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக (எஸ்.பி.சி.ஐ.டி.) பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா (வயது 42). இவர் மகள் சத்யாவுடன் மொபட்டில் வேலூருக்கு வந்தார்.
அங்குள்ள கடைகளில் சில பொருட்கள் வாங்கி விட்டு கந்தனேரி அருகே உள்ள காட்டுக்கொல்லையில் வசிக்கும் உறவினர் வீட்டை நோக்கி சென்றார். வேலூரை அடுத்த பொய்கை சமத்துவபுரம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 மர்மநபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் மொபட்டை முந்திசெல்வது போன்று வேகமாக அமுதாவின் அருகே சென்றனர்.
அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மர்மநபர் திடீரென அமுதா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் சுதாரித்து கொண்டு இடதுகையால் சங்கிலியை இறுக பிடித்து கொண்டார். இதனால் சிறிதளவு மட்டுமே அதாவது ஒரு பவுன் சங்கிலி மர்மநபரின் கையுடன் சென்றது. 4 பவுன் சங்கிலி அமுதாவின் கையில் இருந்தது. இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இந்த சம்பவத்தால் நிலைதடுமாறிய அமுதா மற்றும் சத்யா சிறிதுதூரத்தில் சாலையோரத்தில் மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், அமுதாவின் இடதுபக்க கை, கால் மற்றும் சத்யாவின் முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகிறார்.
தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.