கோபி, அந்தியூர், நம்பியூர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை20 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்

கோபி, அந்தியூர், நம்பியூர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 20 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம் ஆனது

Update: 2023-05-11 21:38 GMT

கோபி, அந்தியூர், நம்பியூர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அந்தியூர் பகுதியில் 20 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம் ஆனது.

கோபி

கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கோபி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

மேலும் இந்த மழையால் கோபி வேலுமணி நகரில் சாலையோரத்தில் இருந்த மரம் அடியோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுபற்றி அறிந்ததும் கோபி நகராட்சி பணியாளர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

அதுமட்டுமின்றி கோபி அருகே உள்ள கூகலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. அந்த பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றால் தென்னை மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் 2 மின் கம்பங்களும் சாய்ந்தன.

இதன்காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. உடனே மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மின்இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சூறாவளிக்காற்றால் பல வீடுகளில் இருந்த ஓடுகள் தூக்கி வீசப்பட்டன. எனினும் இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

அந்தியூர்

அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளிக்காற்றால் அந்தியூர் பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

அதுமட்டுமின்றி அந்தியூரை அடுத்த ஆலயங்கரடு, அம்மன் கோவில் பகுதி, நகலூர் பெருமாபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 20 ஆயிரம் வாழைகள் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்து சேதம் ஆனது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூறாவளிக்காற்றில் முறிந்து விழுந்த வாழைகளை பார்வையிட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'சூறாவளிக்காற்றால் முறிந்து விழுந்த வாழைகளுக்கு உண்டான உரிய இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு பெற்றுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

நம்பியூர்

நம்பியூர், புலியூர், குருமந்தூர், வேமாண்டம்பாளையம், சாவக்கட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் நம்பியூர் பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் நம்பியூர் பகுதியில் 15 மில்லி மீட்டர் மழை பதிவானது. 

Tags:    

மேலும் செய்திகள்