எட்டயபுரம் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் வாரந்ேதாறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடந்து வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகள் வாங்கவும், விற்கவும் வருவது வழக்கம்.
இந்த ஆட்டுச்சந்தையில் சாதாரண வாரங்களில் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறும். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் விற்பனை அமோகமாக இருக்கும். பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகும்.
வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது ஆடுகள் குர்பானி கொடுக்கப்படும் என்பதால், எட்டயபுரம் சந்தையில் நேற்று விற்பனை களை கட்டியது. நேற்று முன்தினம் மதியம் முதலே வியாபாரிகளும், பொதுமக்களும் ஆடுகளுடன் சந்தைக்கு வந்து குவிந்தனர்.
வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு, கொடி ஆடு என்று பல்வேறு வகைகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரத்துக்கும், ஒரு சில ஆடுகள் அதன் எடைக்கு ஏற்ப ரூ.33 ஆயிரம் வரையும் விலை போனது.
ஒரு ஜோடி ஆடு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரம் வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி கொடுக்க செம்மறி ஆடுகளை பயன்படுத்துவர் என்பதால் அவை அதிக அளவில் விற்பனையானது.
நேற்று முன்தினம் மதியம் தொடங்கிய விற்பனை விடிய விடிய நடந்தது. நேற்று மதியம் வரை ஆடுகளை போட்டி போட்டு வாங்கினர். மொத்தம் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.