ஆடுகள் விற்பனை மந்தம்; வியாபாரிகள் ஏமாற்றம்

திருப்புவனத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் போதியளவு ஆடுகள் விற்பனையாகாததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2023-07-11 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் போதியளவு ஆடுகள் விற்பனையாகாததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆட்டு சந்தை

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆடு மற்றும் கோழி சந்தைகள் நடைபெற்று வந்தாலும் திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த சந்தை நடைபெறும் தினத்தன்று ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்தும் ஆடு வியாபாரிகள் தங்களது ஆடுகளை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம்.

ஆண்டுதோறும் தீபாவளி, ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பல்வேறு பண்டிகையின் போது இந்த ஆட்டு சந்தையானது மிகவும் களை கட்ட தொடங்கும். இதுதவிர பொதுவாக ஆடி மாதம் பிறந்தாலே திருமணம் முடிந்த புதுமாப்பிள்ளையை பெண் வீட்டார்கள் தரப்பில் விருந்திற்கு அழைத்து விருந்து வைப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக அசைவ விருந்து வைப்பது வழக்கமாக இருக்கும். இந்த அசைவ விருந்தில் பெரும்பாலும் ஆட்டிறைச்சிதான் இருக்கும். ஆடி மாதத்தை கணக்கு வைத்து திருப்புவனத்தில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அமாவாசை

இந்நிலையில் வருகிற 17-ந் தேதி இந்தாண்டு ஆடி மாதம் பிறப்பதையடுத்து நேற்று திருப்புவனத்தில் ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இதையடுத்து சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்தாண்டு ஆடி பிறப்பும், அமாவாசை தினமும் ஒன்றாக வருவதால் நேற்று நடைபெற்ற இந்த சந்தையில் பொதுமக்கள் ஆடுகளை வாங்குவதற்கு போதிய அளவு ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து ஆடு வியாபாரிகள் கூறியதாவது:- ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறப்பு முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஆடி பிறப்பு தினத்தன்று அமாவாசை தினமும் வருவதால் அன்றைய தினம் விரதம் இருந்து பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

விலை குறைவு

எனவே, அன்றைய தினம் அசைவ உணவை தவிர்க்கும் நிலை உள்ளதால் நேற்று நடைபெற்ற சந்தையில் ஆடுகளின் விலை அதிகமாக இருந்தாலும் போதிய விற்பனை இல்லை. தீபாவளி, ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை தினத்தில் இங்கு ரூ.2 கோடி முதல் 8 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்று ரூ.70 முதல் 80 லட்சம் வரை மட்டுமே விற்பனை நடைபெற்றது.

பண்டிகை காலங்களில் கிடாய் ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை போன நிலையில் நேற்று ஒரு கிடாய் ரூ.12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை மட்டுமே விலை போனது. இதுதவிர இந்தாண்டு தொடர்ந்து தொடர் மழை பெய்து வருவதாலும் இந்த விலை குறைவிற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்