பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருப்புவனத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை
பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது சந்தைகளில் ஆடுகளின் விற்பனை களைகட்டியுள்ளது.
சிவகங்கை,
இப்ராகீம் நபிகள் வாழ்வில் செய்த தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லீம்கள் துல்ஹஜ் மாதம் 10-ம் நாள் பக்ரீத் பண்டிகையாக, தியாகத் திருநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு வரும் ஜூலை 10-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது சந்தைகளில் ஆடுகளின் விற்பனை களைகட்டியுள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த ஆட்டுச்சந்தைக்கு மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
இன்று அதிகாலை முதல் நடந்த சந்தையில் ஆடுக்கிடாய்கள் 10 ஆயிரம் முதல் 27 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரம் நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.