ஆடு, மாடு மேய்ப்பதில் தகராறு: வாலிபரை கொலை செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

ஆடு, மாடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-03-30 19:11 GMT

ஆடு, மாடு மேய்ப்பதில் தகராறு

விராலிமலை, கடைக்கான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா (வயது 42), தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கும் ஆடு, மாடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று சின்னப்பாவை, பழனியம்மாளின் மகன் மணிவேல் (26) தட்டி கேட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சின்னப்பா தரையில் கிடந்த கட்டையை எடுத்து மணிவேலை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த மணிவேலை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிவேல் பரிதாபமாக இறந்தார்.

5 ஆண்டுகள் சிறை

இதையடுத்து மணிவேலின் தாயார் பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பாவை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி நேற்று தீர்ப்பு கூறினார்.

இதில் மணிவேலை கொலை செய்த குற்றத்திற்காக சின்னப்பாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக 2 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்