பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை மும்முரம்-காரிமங்கலத்தில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம்

Update: 2023-01-10 18:45 GMT

தர்மபுரி:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாரச்சந்தைகளில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது. காரிமங்கலத்தில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குல தெய்வ கோவில்களில் பலியிட்டு சிறப்பு வழிபாடு நடத்தவும், காணும் பொங்கல் அன்று இறைச்சி தேவைக்காகவும் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெறும். இதற்காக முன்னதாகவே வியாபாரிகள் கால்நடை சந்தைகளுக்கு சென்று, தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கி வருவார்கள்.

10 ஆயிரம் ஆடுகள்

பென்னாகரத்தில் சந்தைதோப்பு பகுதியில் நேற்று கூடிய வாரச்சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். மேலும் மலைப்பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டன. இந்த ஆடுகளுக்கு வியாபாரிகளிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது.

இதனால் வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். ஆடுகள் எடைக்கு ஏற்றவாறு ரூ.2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை விலைபோனது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளுக்கு தேவையான கயிறுகள், வண்ணப்பொடி, கழுத்து மணி ஆகியவற்றின் விற்பனையும் படுஜோராக நடந்தது.

களைகட்டிய வாரச்சந்தை

காரிமங்கலத்தில் நேற்று கூடிய பிரசித்தி பெற்ற வாரச்சந்தைக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். இதேபோல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதன் காரணமாக அதிகாலையிலேயே காரிமங்கலம் வாரச்சந்தை களைகட்டியது.

எடையை பொறுத்து ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலைபோனது. பொங்கல் பண்டிகை காரணமாக ஆடுகள் விற்பனை சிறப்பாக நடந்தது. மாலையில் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து ஆடுகளும் விற்பனையானதாகவும், ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்