அரசு திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
புதிது புதிதாக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அமைச்சர் காந்தி பேசினார்.
திட்டங்கள் தொடக்க விழா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் காவேரிப்பாக்கத்தை அடுத்த கடப்பேரி ஊராட்சியில் ரூ.46 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற 3 பணிகளை தொடங்கி வைத்து, ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதிய கிராம செயலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு மாவட்ட ஊராட்சிக்குழு நிதியில் கட்டப்பட்டுள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கடப்பேரி மதுரா ராமாபுரம் கிராமத்தில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை ஆகியவற்றை திறந்து வைத்தார். ரூ.42 லட்சத்து 65 ஆயிரத்தில் புதிதாக கட்டப்படவுள்ள கிராம செயலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியும், கடப்பேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.18.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறை கட்டிடத்தையும் அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
திட்டங்களை பயன்படுத்தி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்து கடந்த 1½ ஆண்டுகளில் கடப்பேரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டிலான பணிகள் நடைபெற்றுள்ளது. கடந்த ஆட்சியில் இப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி பேதமின்றி எவ்வாறு திட்டங்களை அனைத்து மக்களுக்கு செயல்படுத்தி வருகின்றார்களோ அதேபோன்று ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இந்த மக்களாட்சியில் கிராமப் புறங்களில் அடிப்படை தேவைகள் உடனடியாக செய்து கொடுக்கப்படுகிறது. உள்ளாட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் தினந்தோறும் புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். மக்கள் அதனை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மாலதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, பாஸ்கரன், கடப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.