தொழில் தொடங்க உலக நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருச்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
திருச்சி,
திருச்சியில் ரூ.655 கோடி மதிப்பீட்டில் 5,639 புதிய திட்டப்பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதன் பின்னர் நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
திருச்சியில் சிறிய விழாவாக இருந்தாலும், அது பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். தற்போது புதிய புதிய துறைகளில் முதலீடுகள் நாம் ஈர்த்துவருகிறோம். தொழில் தொடங்க உலக நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன.
அமைச்சர் அன்பில்மகேஷ் தனது பணியை சிறப்பாக செய்துவருகிறார். அதேபோல அமைச்சரவைக்கு புதியவரான உதயநிதி, அமைச்சரான போது பல்வேறு விமர்சனங்கள் வந்தது. அதற்கெல்லாம் தனது செயல்பாடுகளால் அனைவரது பாராட்டையும் உதயநிதி பெற்றார்.
உதயநிதிக்கு இளைஞர்கள் நலன், விளையாட்டு, சிறப்பு திட்டகள் செயலாக்கத்துறை போன்ற முக்கிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு இந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது
இந்த அரசு விழா மக்கள் நல்வாழ்வு விழாவாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதனை ஒருங்கினைத்து செயல்படுத்திய அனைவருக்கும் எனது நன்றி.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன், மணிமேகலை விருது, முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்தல், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய விழா இது.
திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்க்கை மேம்பாடு அடைந்துள்ளது. பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரே ஆண்டில் ஒரு கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.
ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றக்கூடிய ஆட்சியாக நமது ஆட்சி செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.