திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு 2 அரசு பஸ்கள் நின்று கொண்டிருந்தன. அப்போது 2 மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். இதில் மோட்டார் சைக்கிளை ஒட்டியவர்கள் தலைகவசம் அணிந்திருந்தனர். பின்னால் உட்கார்ந்து வந்தவர்கள் பையில் இருந்த கற்களை பஸ்களின் கண்ணாடி மீது வீசினர். இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. அப்போது பஸ்சில் அமர்ந்து இருந்த பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கினர். இதற்குள் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ெசன்றுவிட்டனர். தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் நேரில் வந்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்தார். இதில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5-க்கும் மேற்பட்டவர்கள் அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்தது பதிவாகி இருந்தது. இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.