பெண் குழந்தைகளை போற்றி பாதுகாக்க வேண்டும்

பெண்குழந்தைகளை போற்றி பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.;

Update:2022-12-11 00:15 IST

பெண்குழந்தைகளை போற்றி பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகை கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ஜோஷ்வின் அமுதா, மாவட்ட சமூகநல அலுவலர் தமிமுன்னிசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு வார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வண்ண பலூன்களை காற்றில் பறக்கவிட்டார்.

மனித சங்கிலி

இதை தொடர்ந்து மகளிர் சுய உதவிகுழுவினர், சுகாதாரத்துறையினர், மாணவ, மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மனித சங்கிலியையும், சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் 2 வாரமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. பெண்குழந்தைகளை போற்றி பாதுகாக்க வேண்டும்.

கனவிலும் வரக்கூடாது

பெண்குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் எண்ணம் கனவிலும் வரக்கூடாது. பெண் சிசு உருவாவதை தடுப்பது குற்றம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியமாகும். மருத்துவம், வேளாண்மை மற்றும் அனைத்து படிப்புகளிலுமே பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளை கொண்ட பல குடும்பங்கள் செழிப்பாக உள்ளன. வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பது பற்றி தெரிந்து கொள்வது குற்றமாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிப்பதை தவிர்க்க வேண்டும். பெண் குழந்தைகளை ஊக்குவிக்க அரசு பல எண்ணற்ற திட்டங்களை வகுத்துள்ளது. அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி பெண்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

தொடர்ந்து சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு புதுமண தம்பதிகளுக்கான கோலப்போட்டியும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு குறித்த வினாடி-வினா போட்டியும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்