தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட்டை குடித்த சிறுமி உயிரிழப்பு...!
தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட்டை குடித்ததால் சிறுமி உயிரிழப்பு
மதுரை,
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிறுமி அகல்யா(9). இவருக்கு சிறுநீரகம் தொடர்பாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.இதனால் சிறுமியை அவருடைய பெற்றோர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று சிறுமி தாயாரிடம் தாகமாக உள்ளது என கூறியுள்ளார். இதனால் சிறுமியின் தாய் அருகில் தண்ணீர் இருக்கிறதா? என்று பார்த்தார். அப்போது அவருடைய கண்ணில் நோயாளிப் படுக்கைக்கு கீழே ஒரு பாட்டில் தென்பட்டது. அதனை எடுத்து சிறுமிக்கு கொடுத்தார்.
அந்த பாட்டிலில் இருந்த திரவத்தை குடித்த சிறுமி உடனடியாக துப்பினார். பின்னர் சிறுமி சிறிது நேரத்தில் மயங்கினார். அதிர்ச்சியடைந்த தாய் மருத்துவரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி ஸ்பிரிட்டை குடித்துள்ளதாகவும், சிறுமி இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்ட தாயார் அதிர்ச்சியில் உறைந்தார். இச்சம்பவம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுநீரக கோளாறு காரணமாகவே சிறுமி இறந்துள்ளார் எனவும், ஸ்பிரிட்டை குடித்ததால் சிறுமி உயிரிழக்க வாய்ப்பில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.