சாலையில் பணத்துடன் கிடந்த துணிப்பை போலீசில் ஒப்படைப்பு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது

பட்டுக்கோட்டையில் சாலையில் பணத்துடன் கிடந்த துணிப்பையை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Update: 2022-10-12 19:32 GMT

பட்டுக்கோட்டையில் சாலையில் பணத்துடன் கிடந்த துணிப்பையை போலீசில் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சாலையில் கிடந்த பை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பண்ணவயல் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஜினி. இவருடைய மனைவி சுகன்யா. இவர் நேற்று முன்தினம் மாலை பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் தனது மகள் ஸ்ரீபாருனியை அழைத்துக் கொண்டு, பெரிய கடைத்தெரு வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலை ஓரத்தில் துணிப்பை கேட்பாரற்று கிடந்தது. அதை மாணவி ஸ்ரீபாருனி, எடுத்து பார்த்தபோது அதில் செல்போன், ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு, ரூ.3 ஆயிரம் இருந்தது. இதையடுத்து மாணவி, தனது தாய் சுகன்யாவுடன் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த போலீசாரிடம் பையை ஒப்படைத்தார். சிறிது நேரத்தில் மஞ்சள் பையில் இருந்த செல்போனுக்கு அழைப்பு வந்தது.

உரியவரிடம் ஒப்படைப்பு

அந்த அழைப்பை எடுத்து போலீசார் பேசியபோது, பணம், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவை இருந்த பை, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த மோகனின் மனைவி துர்காதேவி என்பவருடையது என்பது தெரியவந்தது.

அவரை போலீசார் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வரவழைத்தனர். பின்னர் துர்காதேவியிடம் மாணவி ஸ்ரீபாருனி பையை ஒப்படைத்தார். கீழே பணத்துடன் கிடந்த பையை நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த மாணவி ஸ்ரீபாருனியை துர்காதேவி, போலீசார் பாராட்டினர். மேலும் பல்வேறு தரப்பினரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்