காணாமல் போன சிறுமி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்

நத்தக்காடையூர் அருகே காணாமல் போன சிறுமி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவள் எப்படி இறந்தாள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2023-04-08 17:10 GMT

நத்தக்காடையூர் அருகே காணாமல் போன சிறுமி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவள் எப்படி இறந்தாள் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சிறுமி

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா நத்தக்காடையூர் அருகே உள்ள தொட்டியங்காட்டுப்பதி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதிக்கு தக்சனா ஸ்ரீ (வயது 4) என்ற மகள் இருந்தாள். இந்த நிலையில் நேற்று வீட்டில் சிறுமி தக்சனா ஸ்ரீ தூங்கி எழுந்த நிலையில் மாலை 5.10 மணிக்கு வீட்டிற்கு முன்பு வந்து நின்றுள்ளார். அப்போது அவரது தாயார் தனலட்சுமி வீட்டின் உள்ளே சமையல் அறையில் சிறுமிக்கு பால் காய்ச்சி கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் தனலட்சுமி வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, சிறுமி தக்சனா ஸ்ரீயை காணவில்லை. இதனால் பதறிப்போன பிரபாகரன் குடும்பத்தினர் அக்கம் பக்கம் முழுவதும் சிறுமியை தேடினர். ஆனாலும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடல் மீட்பு

இதையடுத்து காங்கயம் போலீசில் சிறுமியை காணவில்லை என்று பிரபாகரன் புகார் அளித்தார். உடனே காங்கயம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை தேடினர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அருகே 30 அடி ஆழமுள்ள தண்ணீர் நிறைந்த விவசாய கிணற்றுக்குள் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி உள்ளே இறங்கி, சிறுமியை தேடினார்கள்.

ஒரு மணி நேர தீவிர தேடுதலுக்கு பின் இரவு 7.30 மணிக்கு கிணற்றின் உள்ளே தண்ணீருக்கு அடியில் இருந்து சிறுமி தக்சனா ஸ்ரீ பிணமாக மீட்கப்பட்டாள். பின்னர் சிறுமியின் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலை பார்த்து அவருடைய பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

போலீசார் வழக்குப்பதிவு

இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி தக்சனா ஸ்ரீ கிணற்றுக்குள் எப்படி விழுந்து இறந்தாள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் நத்தக்காடையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்