பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.1.22 லட்சம் மோசடி; நைஜீரிய ஆசாமிகள்-பெண் கைது

பரிசு பொருட்கள் அனுப்புவதாக ஏமாற்றி ஆன்லைன் மூலம் ரூ.1.22 லட்சம் சுருட்டிய நைஜீரிய ஆசாமிகள் இருவர் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார்கள்.

Update: 2023-07-10 08:46 GMT

பரிசு பொருள் தகவல்

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, அவரது செல்போனில் தகவல் ஒன்று வந்தது. பெண் ஒருவரிடம் இருந்து வந்த அந்த தகவலில், நான் லண்டனில் வசிக்கிறேன். சென்னைக்கு வர விரும்புகிறேன். உங்கள் உதவி தேவை என்று கூறப்பட்டிருந்தது. சென்னை வரும் முன்பு, உங்களுக்கு பரிசு பொருட்கள் அனுப்ப விரும்புகிறேன். அதற்கான சுங்க கட்டணம் உள்ளிட்ட செலவு தொகையாக ரூ.1.22 லட்சம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன், என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அயனாவரம் நபரும் அதை உண்மை என்று நம்பி, ரூ.1.22 லட்சம் பணத்தை ஆன்லைனில் அனுப்பி வைத்தார். ஆனால் பரிசுப்பொருளும் வரவில்லை. அதன்பிறகு அந்த பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

அதன்பிறகுதான், தாம் ஏமாந்த விசயம் அயனாவரம் நபருக்கு புரிந்தது. இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு, கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள்.

நைஜீரிய ஆசாமிகள்

போலீஸ் விசாரணையில், அரியானா மாநிலம் பரிதாபாத்தில் இருந்து, மேற்கண்ட மோசடி நபர்கள் செயல்படுவது தெரியவந்தது. உடனடியாக சென்னையில் இருந்து சைபர் கிரைம் போலீசார், அரியானா மாநிலம் பரிதாபாத்திற்கு விரைந்தனர். அங்கு தங்கி இருந்த மோசடி நபர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பரிசுபொருள் அனுப்புவதாக தகவல் அனுப்பி மோசடி வலை விரித்த பெண்ணின் பெயர் தபீதா (வயது 32) என்பதாகும். இவர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் துரு கிளிண்டன் (27). இவர்களது நண்பர் கூகோ பிரான்சிஸ்கோ (40). இவர்களில் ஆண்கள் இருவரும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்பின் தெரியாத, முகம் தெரியாத நபர் அனுப்பிய தகவலை வைத்து, ஆன்லைன் மூலம் ரூ.1.22 லட்சம் பணத்தை அனுப்பி மோசம் போய் இருக்கிறார் புகார்தாரர். இதுபோன்ற தகவல் அடிப்படையில் பணம் அனுப்பக்கூடாது என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்