கடன் தொல்லையால் துணிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தக்கலை அருகே கடன் தொல்லையால் துணிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-12 15:59 GMT

தக்கலை:

தக்கலை அருகே கடன் தொல்லையால் துணிக்கடை அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

துணிக்கடை அதிபர்

தக்கலை அருகே உள்ள பள்ளியாடி நெசவாளர் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (வயது 46). இவருக்கு ஷோபா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படித்து வருகிறார்கள்.

பிரசாத் பள்ளியாடி பகுதியில் 2 துணிக்கடைகள் நடத்தி வந்தார். மனைவி ஷோபா கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளாக பிரசாத்தை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மனைவியை பிரசாத் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும், அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், தனது மகள்கள் மற்றும் வயதான பெற்றோருடன் பிரசாத் வசித்து வந்தார்.

கடன்

இந்த நிலையில் கொரோனா வேறு குறுக்கிட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக கடையில் சரியாக வியாபாரம் இல்லாமல் இருந்தது. இதனால் பிரசாத் கடையை நடத்தவும், மகள்களின் படிப்பு செலவு மற்றும் பெற்றோரின் பராமரிப்புக்காகவும் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. சில மாதங்கள் கடந்ததும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.

ஏற்கனவே, மனைவி பிரிந்து சென்றதாலும், வியாபாரம் சரிவர நடக்காததாலும் கடந்த சில நாட்களாக பிரசாத் மன வருத்தத்தில் இருந்து வந்தார். பிரசாத்தின் நிலையை அறிந்த அவரது சகோதரி, 2 மாதத்தில் கடனை அடைக்க உதவி செய்வதாக கூறியுள்ளார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அனைவரும் உட்கார்ந்து வீட்டில் சாப்பிட்டு விட்டு, தூங்கச் சென்றனர். நேற்று காலையில் மகள்கள் எழுந்து பிரசாத்தின் படுக்கை அறை கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

இதனால், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போதுஅங்கு பிரசாத் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். அதை கண்டதும் மகள்கள் கதறி அழுதனர். அவர்களது அழுகுரல் கேட்டு பிரசாத்தின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர், கதவை உடைத்து பிரசாத்தை தூக்கு கயிற்றில் இருந்து கீழே இறக்கினார்கள். அப்போது, அவர் இறந்தது தெரியவந்தது.

சோகம்

இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கடன்தொல்லையால் துணிக்கடை அதிபர் பிரசாத் தற்கொலை செய்வது என்ற விபரீத முடிவுக்கு வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.

மகள்களுக்கு உணவு தயார் செய்து  கொடுத்த தந்தை

தினமும் அதிகாலையிலேயே பிரசாத் எழுந்து விடுவார். அவர் வீட்டு வாசலில் கோலம் போடுவது, மகள்கள் பள்ளிக்கு தேவையான காலை, மதிய உணவு தயார் செய்வது மற்றும் அவர்களை பள்ளிக்கு அனுப்புவது உள்பட அனைத்தையும் அவரே செய்து வந்துள்ளார். நேற்று காலையில் பிள்ளைகள் எழுந்து பார்த்தபோது, பிரசாத்தின் அறைக்கதவு பூட்டப்பட்டு இருந்தது. அதிகாலையில் அப்பா எழுந்து விடுவாரே, இன்று இன்னும் வெளியே வராமல் இருப்பதை கண்டு மகள்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால், வாசலில் கோலம் போடப்பட்டு இருந்தது. மேலும், சமையல் அறையில் காலை உணவும் மற்றும் பள்ளிக்கு மதிய உணவும் தயார் நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மகள்கள் அவரது அறை கதவை தட்டினார்கள். அறைக்கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது பிரசாத் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தந்தையை இழந்த மகள்களின் கதறல்

தாய் பிரிந்து சென்று விட்டாலும், அந்த குறை தனது மகள்களுக்கு ெதரிய கூடாது என்று அளவுகடந்த பாசத்துடன் மகள்களை பிரசாத் வளர்த்து வந்துள்ளார்.

ஏற்கனவே, தாய் பிரிந்து சென்ற நிலையில் தந்தையும் இறந்ததால் மகள்கள் இருவரும் பிரசாத்தின் உடலை கண்டு கதறி அழுதது காண்போர் கண்களையும் குளமாக்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்