சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

கொள்ளிடம் பகுதியில் கொட்ட இடமில்லாததால் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளை கொட்ட விரைவில் இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-16 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் கொட்ட இடமில்லாததால் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளை கொட்ட விரைவில் இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றின் கரை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் ரெயில் பாலம் அருகே நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வந்தது.இந்தநிலையில் நீர்நிலைகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் நிலவியதால் நீர்நிலை பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அப்பகுதி கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக இந்த பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என நீர்வள ஆதாரத்துறையினர் அறிவித்தனர்.

தீயிட்டு கொளுத்தப்படுகிறது

இதையடுத்து ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் பொதுமக்கள் கூடும் இடங்கள், குடியிருப்புகள், பள்ளிக்கு செல்லும் சாலைகள் என பல இடங்களில் குவிந்து கிடக்கிறது. குப்பைகளுடன் இறைச்சிகழிவுகள், நெகிழி பொருட்களும், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவைகள் மூட்டைகளாக கட்டி எடுத்து சென்று இரவு நேரங்களில் குறிப்பிட்ட சில குடியிருப்பு பகுதிகளில் தீயிட்டு கொளுத்தப்படுவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் குப்பைகள் கொட்டுவது கடந்த இரண்டு மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாற்று இடம் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. இதனால் சாலைகள், கடைவீதிகளில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் ஊராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை இரவு நேரங்களில் எரிக்கப்படுகிறது.

இடம் தேர்வு

கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமப் பகுதியில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதில் ஒரு பகுதியில் ஊராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு விரைவில் குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் காலதாமதம் ஆவதால் கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கண்ட கண்ட இடங்களில் குவியல் குவியலாக சேர்ந்து சுகாதார கேடு விளைவித்து வருகின்றன.எனவே உடனடியாக குப்பைகளை தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்