மலை போல் தேங்கி இருக்கும் குப்பைகள்
வந்தவாசியில் மலை போல் தேங்கி இருக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
வந்தவாசி
வந்தவாசி சன்னதி தெருவில் 3 பள்ளிகள், 3 வங்கிகள் இயங்கி வருகிறது. இந்த சாலையில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த பிரதான சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே குப்பைகள் மலை போல் தேங்கி உள்ளது.
5 நாட்களாகியும் நகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்றாமல் தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருவதால் தேங்கியிருக்கும் குப்பைகளை மாடுகள், நாய்கள் கிளறும் போது குப்பைகள் காற்றில் பறக்கின்றன. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் 5 நாட்களாக குப்பைகள் அகற்றாமல் ஒரே இடத்தில் இருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் போது மூக்கை பிடித்துக் கொண்டு பெரும் சிரமத்துடன் செல்கின்றனர்.
இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கும், நகரமன்ற தலைவருக்கும் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.