ரோட்டில் குவியும் குப்பைக்கு விடிவு பிறக்குமா?
ரோட்டில் குவியும் குப்பைக்கு விடிவு பிறக்குமா?
திருப்பூர்,
திருப்பூர் கணபதிபாளையத்தில் இருந்து பொங்கலூர் செல்லும் வழியில் சென்னிமலைபாளையம் உள்ளது. இந்த பகுதியில் குப்பை தொட்டிகள் குறைவான அளவில் உள்ளன. இதனால் இங்கு ரோட்டோரங்களில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதில் சில இடங்களில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதனால் ரோட்டோரத்தில் மலை போல் குப்பை குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக இப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், பல நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பையில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதேபோன்று திருப்பூரில் இருந்து பொங்கலூர் செல்வதற்கு பெரும்பாலானவர்கள் இந்த ரோடை பயன்படுத்துகின்றனர். இதனால் தினமும் அதிக அளவிலான வாகனங்கள் இவ்வழியாக செல்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் ரோட்டை ஆக்கிரமித்து குப்பை கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் இரை தேடி வரும் நாய்கள் சில நேரங்களில் ஒன்றுக்கொன்று ரோட்டில் சண்டையிடுவதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே, இதற்கு விடிவு பிறக்கும் வகையில் குப்பை தொட்டிகள் வைப்பதற்கும், முறையாக குப்பைகளை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
--