5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கோபாலசமுத்திரம் பெட்ரோல் பங்க் பகுதியில் கடந்த 28.8.2023 அன்று சேரன்மாதேவியை சேர்ந்த கணேசன் (வயது 39) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய பேச்சிமுத்து (21) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் இதில் தொடர்புடைய சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரிராஜ் என்ற ராசுக்குட்டி (26), இசக்கிபாண்டி என்ற சின்னதுரை (29), முனைசேகரன் குடியிருப்பை சேர்ந்த சரவணன் (22), தருவையை சேர்ந்த முத்து (22) ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி ராசுக்குட்டி, இசக்கிபாண்டி என்ற சின்னதுரை, சரவணன், முத்து ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.
அதேபோல் அம்பை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரம்மதேசத்தை சேர்ந்த மதன் (23) என்பவரை கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்தனர். அவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின்பேரில் கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.