3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருவண்ணாமலை ஜன்னத் நகரை சேர்ந்த அப்துல்நிசார் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் தர்வீஸ் (27). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த அப்துல்நிசாரின் தந்தை அப்துல்காதர் (55) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்வீஸ் மற்றும் அவரது நண்பரான பல்லவன்நகரை சேர்ந்த தனசேகர்சூர்யா (27), உறவினரான ஜன்னத்நகரை சேர்ந்த முபாரக் (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் தர்வீஸ் உள்பட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.