செங்கல்பட்டு கோர்ட்டு அருகே வெடிகுண்டு வீசி ரவுடியை கொல்ல முயற்சி

செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்த ரவுடியை மர்மநபர்கள் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனர்.

Update: 2023-07-07 00:08 GMT

கோர்ட்டில் ஆஜராக

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்- இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 32). இவர் மீது தாம்பரம், ஓட்டேரி பகுதிகளில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் மீது உள்ள கொலை வழக்கு ஒன்றுக்காக நேற்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்தார். அவருடன் சீனு என்ற சீனிவாசன், மோகன் ஆகியோரும் கோர்ட்டில் ஆஜராக வந்தனர். கோர்ட்டு அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்தனர்.

வெடிகுண்டு வீச்சு

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினர் அந்த வெடிகுண்டு டீக்கடையை ஒட்டியபடியிருந்த சுற்றுச்சுவரில் பட்டு வெடித்தது. நாட்டு வெடிகுண்டு வெடித்ததும் அந்த டீக்கடையில் இருந்த அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.லோகேஷை மட்டும் குறிவைத்து துரத்திய மர்ம நபர்கள் மற்றொரு வெடிகுண்டை லோகேஷ் மீது வீசினர். இதில் நிலைதடுமாறி விழுந்த லோகேஷை அந்த மர்ம கும்பல் தலை பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.படுகாயம் அடைந்த லோகேஷை அங்கு இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத், துணை போலீஸ் சூப்பிரண்டு பரத், செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் குண்டு வீசிய பகுதிகளில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

லோகேஷின் அண்ணன் பாட்சி என்ற பாஸ்கரன் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் பாலாஜியின் நண்பர்கள் பாட்சி என்ற பாஸ்கரனை அதே ஆண்டு கொலை செய்து பழிக்கு பழி தீர்த்தனர்.

போலீசார் குவிப்பு

இதன் தொடர்ச்சியாக தனது அண்ணனை கொலை செய்தவரை கடந்த 2016-ம் ஆண்டு லோகேஷ் கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக பீர்க்கங்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த போது தான் இந்த கொலை முயற்சி அரங்கேறியுள்ளது. செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு வீச்சால் கோர்ட்டு அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியில் இது போன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்